காசிக்கு_நிகரான பஞ்ச_குரோச_தலங்கள்
#திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படும் ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத காரியமாகவும் உள்ளது. ஏழை எளியவர்கள் அவ்வளவு தூரம் சென்று இறைவனை தரிசித்து வருவது என்பது சாத்தியமில்லைதான். அதற்காக உருவானவையே ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்ற ஐந்து சிவாலயங்கள். குரோசம் என்பதற்கு இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் என்று பொருள்.
#தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, மனிதர்கள் பயன்பெறுவதற்காக அம்பெய்தி உடைத்தார், ஈசன். அந்த அமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி, ஐந்து தலங்களாக மாறியது. இந்த ஐந்து ஆலயங்களே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே இந்த ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
🕉️🔱 #சிவசைலம்
தென்காசி மாவட்டத்தில் உள்ளது ஆழ்வார்குறிச்சி. இங்கிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் பரமகல்யாணி உடனாய சிவசைல நாதர் கோவில் உள்ளது. கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இந்த ஊர், முன்காலத்தில் கடம்ப வனமாக இருந்திருக்கிறது. நந்திகேஸ்வரர், எழுந்து நிற்கும் தோரணையில் காட்சி தருகிறார். பரமகல்யாணி அம்மன் நான்கு கரங்களுடன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவரை நான்கு புறம் இருந்து தரிசிக்கும் வகையிலான தனிச் சிறப்பு கொண்டது இந்த ஆலயம். திருநெல்வேலியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிவசைலம் திருத்தலம்.
🕉️ #ஆழ்வார்குறிச்சி
திருநெல்வேலியில் இருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் இருக்கிறது, ஆழ்வார்குறிச்சி. இங்கு வன்னீஸ்வரர் திருக் கோவில் உள்ளது. அக்னி பகவான் வழிபாடு செய்த இறைவன் என்பதால், இத்தல மூலவர் ‘அக்னீஸ்வரர்’, ‘வன்னியப்பர்’, ‘வன்னீஸ்வரர்’ என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார். மூலவரின் சன்னிதி முன்பாக உள்ள தூணில், கர்ப்பமான நிலையில் ஒரு பெண் தெய்வம் அருள்கிறது. சுகப் பிரசவம் ஏற்படவும், விரைவில் திருமணம் நடைபெறவும், காலசர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் நீங்கவும் இந்த பெண் தெய்வத்தை வழிபடுகிறார்கள். பாப நாசத்தில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
🕉️ #பாபநாசம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம் என்ற ஊர். இங்கு உலகம்மை உடனாய பாபநாசநாதர் கோவில் இருக்கிறது. இறைவன் ‘பாபநாசநாதர்’ என்றும், அம்பாள் ‘உலகம்மை, விமலை’ என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர். தேவர்களின் தலைவனான இந்திரனின் பாவங்களை எல்லாம் போக்கி அருளிய இறைவன் என்பதால், இவருக்கு இந்தப் பெயர் வந்தது. தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன. நவ கயிலாயங்களில் முதல் தலமாக விளங்கும் இந்த பாபநாசம், சூரிய பகவானுக்குரியதாகத் திகழ்கிறது.
🕉️ #கடையம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கடையம். இங்கு நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இறைவனின் திருநாமம் ‘வில்வவனநாதர்.’ “காணி நிலம் வேண்டும் பராசக்தி..’ என்று பாரதியார் வேண்டிய சக்தியாக, இந்த ஆலயத்தில் அருளும் நித்யகல்யாணி அம்மன் திகழ்கிறார். சிவபெருமான், பிரம்மதேவனுக்கு வில்வ பழத்தை வழங்கினார். அதை மூன்றாக உடைத்த பிரம்மன், ஒரு பாகத்தை கயிலாய மலையிலும், மற்றொரு பாகத்தை மேரு மலையிலும், இன்னொரு பாகத்தை துவாத சாந்த வனத்திலும் நட்டார். மூன்றாவது பகுதியை பிரம்மன் நட்ட, துவாத சாந்த வனத்தில்தான், வில்வவனநாதர் கோவில் இருக்கிறது. இங்குள்ள வில்வ மரத்தில் எப்போதாவதுதான் காய் காய்க்கும். அதை உடைத்துப் பார்த்தால், அதன் உள்ளே சிவலிங்க பாணம் போன்று விதை இருப்பதை காணலாம் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் கோவில் கதவில், ராமரின் தந்தையான தசரதனால், சிரவணனன் கொல்லப்பட்ட காட்சிகள் சிற்பகமாக செதுக்கப்பட்டுள்ளன. மேலும் ராமாயணத்தோடு தொடர்புடைய நிறைய சிற்பங்களும் காணப்படுகின்றன. திருநெல் வேலியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்திலும் கடையம் உள்ளது.
🕉️ #திருப்புடைமருதூர்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் திருக் கோவில். இத்தல இறைவனின் புராணப் பெயர், ‘புடார்க்கினியீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளின் திருநாமம், கோமதி அம்மன். மூலவரின் திருமேனி மீது காயம்பட்ட வடு உள்ளது. இதனால் சுயம்புவாக தோன்றிய இந்த மூலவரின் மீது சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்கிறார்கள். அபிஷேகம் எதுவும் கிடையாது.
“நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ..” என்று கேட்ட கருவூர் சித்தருக்காக, சுயம்புவான இத்தல மூலவர் சற்றே சாய்ந்து காட்சியளித்தார். அந்த சாய்வு நிலையிலேயே மூலவரை நாம் தரிசிக்கலாம். தேடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை, செவிசாய்த்து கேட்பவர் என்பதாகவும் இதனை பொருள் கொள்ளலாம்.
🕉️🔱ஓம் நமசிவாய நம ஓம் 🙏🏼
Comments
Post a Comment